Wednesday, May 21, 2014

பழக் கச்சாயம்

தேவையான பொருட்கள் 
பழுத்த வாழைப்பழம் -1
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க 
செய்முறை
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து மசித்துக்கொள்ளவும். 
அதனுடன் ரவை-மைதா-பேக்கிங் சோடா-சர்க்கரை-ஏலக்காய்ப் பொடி இவற்றை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். 
இந்தக் கலவை குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும். [அதிக நேரம் ஊறினாலும் சுவை நன்றாக இருக்கும்.  கரைத்து குளிர்சாதனப்பெட்டியில் 8-9 மணி நேரங்கள் வைத்தும் உபயோகிக்கலாம்.]
எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து கச்சாயக் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போடவும்.
 பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறவைத்து பரிமாறவும்.
இந்தக் கச்சாயம் அறை வெப்பநிலையில் 1-2 நாட்கள் நன்றாக இருக்கும். பழசானால்தான் சுவை அதிகரிக்கும். முதல் நாள் செய்து அடுத்த நாள் சாப்பிட்டுப் பாருங்க..உங்களுக்கே தெரியும்! :)

குறிப்பு 
வாழைப்பழத்தின் சுவையே போதுமானதாக இருந்ததால் நான் ஏலப்பொடி சேர்க்கவில்லை.
மாவில் சர்க்கரை சேர்த்து கரைத்திருப்பதால் கச்சாயம் சீக்கிரம் சிவக்கும். கவனமாக கருக விடாமல் எடுக்கவேண்டும். 

Wednesday, May 14, 2014

வசந்தமலர்கள்- பாப்பி (Poppy)

முதன்முதலில் பாப்பி மலர்கள் அறிமுகமானது ஒரு சில வருடங்கள் முன்பாகத்தான். இங்கே அபார்ட்மென்ட்டில் ஒரு வசந்தத்திற்கு இந்த வண்ண மலர்களை நட்டிருந்தார்கள். அப்போது நான் செடிகள் வளர்க்கத்துவங்காத சமயம்..செடிகள் வளர்க்க ஆரம்பித்தும் 2-3 வருஷங்கள் கழித்தே இந்த வசந்தத்தில் பாப்பி நாற்றுகள் ஹோம் டிப்போ-வில் கிடைத்தன. பளிச் என்ற ஆரஞ்சு வண்ணம் கவர என் மனம் கவர்ந்த மஞ்சளை விட்டு இந்தப்பூவை எடுத்துவந்தேன். :) 
வாங்கிவருகையில் இருந்த பூக்கள் நீஈஈஈளமான காம்புகளுடன் ஒய்யாரமாக நின்றன. அதன்பிறகு வளர்ந்த மொட்டுக்கள் உயரம் குறைவாகவே இருந்தன. மலர்ந்த பூக்களும்  திடீரென அடித்த காற்றில் அதிகநாள் தாக்குப்பிடிக்காமல் சட்டென்று உதிர்ந்தும் போயின. அப்படி இப்படியென்று கேமராவில் சிக்கிய ஒரு சில பாப்பி மலர்கள் இவை.
கடந்த சனிக்கிழமை கடைக்குப்போனபோது இரண்டு மஞ்சக்கலர் (ஜிங்குச்சா! :)) வாங்கிவந்தேன். 
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு மேரிகோல்ட்/செண்டுமல்லிச் செடி..இந்த நிறம் இதுவரை இருக்கும் பூக்களில் இல்லை என்பதை என்னவர் நினைவுபடுத்த இன்னுங்கொஞ்சம் சந்தோஷத்துடன் வாங்கிவந்தேன். :) 

அப்படியே சும்மா பேபி செக்‌ஷனில் வலம் வந்தபோது மாட்டியது இந்த மஞ்சக்கலர் ஜிங்குச்சா! :) பிங்கி பிங்க்கிற்கு மாற்றாக ஒரு டிரெஸ்  சிக்கியது லயாவிற்கு! 
படத்தில் மஞ்சள் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியுது, நேரில் அழகான மஞ்சளாக்கும்! ;)
...
......
...சரி, ரொம்ப காஞ்சுட்டீங்களா? கூல்..கூல்! இந்தாங்க ஐஸ்க்ரீம் கேக்...சாப்ட்டு கூலாக்கிங்குங்கோ!! :)
இந்த வாரம் முழுக்க இங்கே சரியான வெயில்..ஸ்பிரிங் ஹீட் வேவ் வந்திருப்பதாக நியூஸில் சொல்கிறார்கள். 90,95, 100 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் எகிறுகிறது. 
சமீபத்தில் என் தொட்டிச் செடிகளுடன் புதிதாக இணைந்தவை... நியூயார்க்கில் இருந்து வந்த பேனா நட்பூ ஒருவர் கொணர்ந்த செடிகள். இங்கே வின்டர் ஜாஸ்மின் இருப்பது தெரியாமல் அதுவும், கூடவே சன் ஸ்டார்-ம் வாங்கி வந்திருந்தார். இன்னும் இவர்களை இடம் மாற்றிவைக்கவில்லை. அதற்குள் வெயில் கொளுத்துகிறது..அவ்வ்வ்! 
இந்த சன் ஸ்டார் ஒரு இன் - டோர் ப்ளாண்ட் என இணையம் சொல்கிறது. இன்னுங்கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிவிட்டு விரைவில் மாற்றி நடவேண்டும். அதுவரை என்ஜாய் த வெயில்ல்ல்ல்ல்! நன்றி! :) 

Thursday, May 8, 2014

சின்ன உருளைகிழங்கு வறுவல்/Baby Potato Roast

தேவையான பொருட்கள்
குட்டி உருளை கிழங்கு - 14
வரமிளகாய்-5 அல்லது 6
கொத்துமல்லி விதை/தனியா -1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன் 
கடுகு-1/4டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு 
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். கிழங்கில் முட்கரண்டியால் ஆங்காங்கே குத்தி வைக்கவும்.
 வெறும் கடாயில் கொத்துமல்லி,சீரகம், வரமிளகாயை வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.
 வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெந்த உருளைக்கிழங்குகளை சேர்க்கவும்.
 மிதமான தீயில் கிழங்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு பொடித்து வைத்த பொடியைச் சேர்க்கவும்.
 பொடி எல்லாக் கிழங்கிலும் படுமாறு பிரட்டிவிட்டு சில நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
 ஈஸியான டேஸ்ட்டி உருளை வறுவல் ரெடி. எல்லா வகையான சாதங்களுடனும் பக்க உணவாகச் சாப்பிடலாம்.
 படத்தில் இருப்பது அரிசிம்பருப்பு சோறு & குட்டி உருளை வறுவல்
குறிப்பு
தனியா-சீரகம்-மிளகாயை மிக்ஸியில் நைஸாகப் பொடித்தும் சேர்க்கலாம், நான் கையுரலில் ஒன்றிரண்டாக அரைத்துச் சேர்த்தேன்.[காரணம் எங்க வீட்டுப் பெண்ணரசி! ;) ]. 5 மிளகாய் சேர்த்திருந்தாலும் காரமில்லாத மிளகாய்கள் என்பதால் வறுவல் மைல்ட்-ஆகவே இருந்தது. கொஞ்சம் காரம் "சுருக்"-குன்னு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என நினைக்கிறேன்! ;) நீங்க பார்த்துப் போட்டுக்குங்கோ! நன்றி! 

LinkWithin

Related Posts with Thumbnails