Friday, March 28, 2014

Precious Foot Prints..

எங்க வீட்டுக் குட்டி தேவதையின் பாதச்சுவடுகள்..
அவள் பிறந்து 3 வாரங்கள் ஆகியிருந்தபொழுது எடுக்கப்பட்டது இந்த அழகுச் சுவடுகள்..
பட்டுப்பூவின் குட்டிப்பாதம் களிமண்ணில் பதிக்கப்பட்டு.. 
Precious hand and foot prints-இன் ஸ்டுடியோவில்..
கிட்டத்தட்ட இரு மாதங்கள் இருந்து மெருகேற்றப்பட்டு..
எங்கள் நினைவுப் பெட்டகத்தில் சேர்ந்திருக்கிறது.
லயா பிறந்த மருத்துவமனையில் ஃப்ரொபஷனல் போட்டோ ஷூட் மற்றும் இந்த hand and foot prints எடுப்பதற்கும் வசதிகள் இருக்கின்றன. பாப்பு பிறந்த அடுத்த நாளில் இருந்தே இவர்கள் நம்மை அணுகி விசாரிக்கிறார்கள். நாங்கள் போட்டோ அங்கேயே எடுத்துக்கொண்டோம், இந்தச் சுவடுகள் பதிக்க நேரம் ஒத்துவராத காரணத்தால் 3 வாரங்கள் கழித்து அவர்களது ஸ்டுடியோவிற்குச் சென்று எடுத்துவந்தோம். 
மேலே படத்தில் உள்ள பாதங்களில் ஒரு பாதத்தின் அச்சு மருத்துவமனையில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசமாக அவர்கள் தருவது. நாங்கள் இரண்டாக வாங்கிக்கொண்டோம். இந்த டிசைன், வடிவம் மட்டுமே என்றில்லாமல் பல்வேறு வடிவங்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை.
அச்சுக்கள் எடுத்த பெண்மணி, மிகப் பொறுமையாக என் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாப்புவின் பாதத்தையும் ஜில்ல்ல்ல்ல் களிமண்ணில் சீக்கிரமாகப் பதித்துக்கொண்டார். அச்சுக்கள் 3 வாரம் காயவைக்கப்பட்டு, பிறகு சுடப்பட்டு, வண்ணம் தீட்டி உருவாக்கப்படும். அதனாலேயே 2 மாதங்கள் ஆகின்றன என்று கூறினார்.
ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதற்கு "Why not?" என்று புன்னகையுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். :)
பொறுமையாகப் படித்து ரசித்துவிட்டீர்கள்..சோறு-வெண்டைக்காய்ப் புளிக்குழம்பு-பீட்ரூட் பொரியல்-கீரைப்பொரியல்-ரசத்துடன் சாப்பிட்டுட்டுப் போங்க. நன்றிகள்! 
:) 

Tuesday, March 18, 2014

தொட்டிச் செடிகள்..

வீடு மாறியதிலும் குளிர்காலத்திலும் தொட்டிச்செடிகள் சொல்லிக்கொள்கிற அளவுக்கு செய்திகள் ஏதும் தரவில்லை. ஆனாலும் சும்மா விடமுடியுமா?- என்று அதையுமிதையும் சொல்லி(உங்களைக்)கொ(ல்)ள வேண்டி ஒரு பதிவு! :) 

இந்த வீட்டுக்கு வந்த பிறகு முதல் பூ மேலே உள்ள மஞ்சள் ரோஜா! எல்லாச் செடிகளும் அமைதியாக இருக்க, இந்த அம்மிணி:) மட்டும் ஒரே ஒரு மொட்டு விட்டு அழகாகப் பூத்துச் சிரித்தாள் புத்தாண்டில்! மற்ற ரோஜாக்கள் எல்லாம் இப்போதுதான் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. 
~~~
ஒரு முறை காய்கறி கடையில் வெங்காயத்தாள் எடுத்துக்கொண்டிருந்தேன்.  ஒரு அமெரிக்கப் பெண்மணி சினேகமான குரலில் சொன்னார், "இவற்றை நட்டு வைத்து வளர்ப்பதற்காகவும் நான் வாங்குகிறேன்!" என்று! ஆஹா என்று நானும் 2 கட்டு வாங்கிவந்தேன். எப்போதும் வெங்காயத்தாள் வாங்கினால், வேர்ப்பகுதியை நீக்கி, குப்பையில் போட்டுவிட்டு, சமைத்துவிடுவது வழக்கம்.  இந்த முறை கவனமாக வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியை நறுக்கி..
வராது..எதற்கும் நட்டுப்பார்ப்போமே என்று காலியாயிருந்த சில தொட்டிகளில் செருகி (கவனிக்க, நட்டு வைக்கக் கூட இல்லை..சும்மா பேருக்கு போட்டு விட்டேன்!!) வைத்தேன். மறந்தும் விட்டேன்..சில நாட்கள் கழித்து எதேச்சையாகத் தொட்டிகளைப் பார்க்க...
வெங்காயங்கள் அழகாகத் துளிர்விட்டு வந்துகொண்டிருந்தன!! :))) 
நட்டு வைத்த தொட்டிகளில் வெங்காயத்தாள்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பறிக்கவில்லை..பறித்தபிறகு மீண்டும் ஒரு பதிவைப் பகிர்கிறேன். 

அடுத்து வருவது ஆரஞ்சு! கீழே குடியிருந்த வீட்டம்மா எலுமிச்சை-ஆரஞ்சு என இரண்டு மரங்களை எங்களை நம்பி விட்டுப் போய்விட்டார்..மரங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரளவு பெரிய தொட்டிகள் வேணும் என என்னவர் நான் ஏற்கனவே தயார் செய்திருந்த தொட்டிகளை எல்லாம் மாற்றி, மரங்களுக்கு இடமளித்தார். கடந்த ஓரிரு மாதங்களாகவே ஆரஞ்சு மரத்தில் மொட்டுக்கள் கட்ட ஆரம்பித்தன. மிக மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த மொட்டுக்கள் மலர ஆரம்பித்தபின் ஒரே வேகம்தான்! 
கம்மென்ற சுகந்த மணத்துடன் ஆரஞ்சுப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. காற்றடிக்கையில் சுற்றிலும் நாலைந்து அடிகள் தொலைவுக்கு மணம் கமழ்கிறது இப்பூக்கள்! மரம் இன்னும் செடியாக இருப்பதால் பிஞ்சுகள் நிற்கவில்லை..பிஞ்சு பிடித்துப் பிடித்துப் பூக்கள் உதிர்ந்துபோகின்றன. சரி விட்டுப் பிடிப்போம்! :) 
மரங்களுக்காக தொட்டிகள் மாறியதில், அவற்றில் நிரப்பப்பட்டிருந்த மண்ணும், அதில் நான் நட்டிருந்த கேரட் விதைகளும் அங்குமிங்குமாக இடம் மாறிப் போயின.. இந்த வீட்டுக்கு வந்ததும் பார்க்கிறேன், பூக்கள் வளர்க்கும் தொட்டியில் சில கேரட்டுகள் வளர்ந்துகொண்டிருப்பதை!!
3 மாதங்களுக்கும் மேலாக கேரட்டுகள் வளர்ந்துகொண்டேஏஏஏ இருக்கின்றன. இந்த வசந்தத்துக்கு மலர்ச்செடிகள் வாங்கிவந்த பின்னர்தான் தொட்டிச் செடிகளுக்கு மராமத்து வேலைகள் நடக்கும் என்ற சாக்குச் சொல்லிக்கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கேன். சீக்கிரம் எங்க வீட்டுக்கு வசந்தம் வர வாழ்த்துங்கோ!! ;) 
வாடையில் வாடிக்கிடந்த செவ்வந்திப் பூவக்கா..
திடீரென பளீரென மலர்ந்து சிரிக்கிறாள்! 
~~~
Geno: I buried my coconut macroon in this pot. Mommy is angry at me as I broke one of the onion plants!! ;)) She didn't say anything because she was holding my lil Sister Laya! Yay..having a sis is a bliss!!  :D

Tuesday, March 11, 2014

கொள்ளுப் பருப்பு மற்றொருமுறை

மற்றொரு முறையா? அப்ப ஏற்கனவே ஒரு முறை கொள்ளுப்பருப்பு கடைஞ்சிருக்கீங்களா?- ன்னு கேட்பவர்கள் இங்கே க்ளிக்கி ஒரு எட்டு பார்த்துட்டு வந்துருங்கோ!  அது "பச்சை செலவு" போட்டு கடைஞ்சது..இது மொளகா வேவிச்சுக் கொட்டி கடைஞ்சது! :) 
ஆக்ச்சுவலி, கடைவது என்பதை விட (ஊரில் என்றால்) அம்மி அல்லது ஆட்டுக்கல்லில் அரைத்தெடுப்பது வழக்கம். இங்கே மிக்ஸியில் பல்ஸ்-ல போட்டு எடுத்திருக்கேன். 
~~~
தேவையான பொருட்கள்
கொள்ளு-1/4கப்
தக்காளி-1
சின்னவெங்காயம்-8 (அ) நறுக்கிய வெங்காயம்-1/4கப்
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை -ஒரு கொத்து
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
கொத்துமல்லி/தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
எண்ணெய்-2டீஸ்பூன்
உப்பு 
செய்முறை
குக்கரில் 11/2 கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, கொதி வந்ததும் கொள்ளு, தக்காளி, ஓரிரு சொட்டு எண்ணெய்,  மஞ்சள்தூள் சேர்த்து 4-5 விசில்கள் வரும்வரை மிதமான தீயில் வேகவைக்கவும். 
கடாயில் எண்ணெய் காயவிட்டு கொத்துமல்லி-சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். 
ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துவைக்கவும்.
வெந்த கொள்ளின் தண்ணீரை இருத்துவைத்துவிட்டு,  கொள்ளு மற்றும் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த வெங்காயக் கலவை-அரைத்த கொள்ளு-தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான கொள்ளுப் பருப்பு தயார்.
சுடுசாதம்-தேங்காயெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும். 
பி.கு. கொள்ளுடன் 2 தக்காளியாகப் போட்டு வேகவைத்தால் வெந்ததும் ஒரு தக்காளியையும், கொள்ளுத்தண்ணீரையும் இருத்து கொள்ளுரசம் வைத்துக்கொள்ளலாம்.  படத்தில் குக்கரில் 2 தக்காளி இருப்பதை பார்த்து(பார்த்தீங்க??? ;)) குழம்பாமலிருக்க இந்தப் பின்னிணைப்பு. 

Thursday, March 6, 2014

பண மரம்..

எனது தோட்டப்பைத்தியம் உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்ததுதான்!! ஒவ்வொரு முறை தொட்டிச்செடிகள் வாங்கும்போதெல்லாம் "எதற்கு செடிகளாய்ச் சேர்க்கிறாய்? ஏற்கனவே 30 தொட்டிக்கு மேல இருக்கு!" என்ற செல்ல முணுமுணுப்பு கேட்கும், இருந்தாலும் மெல்ல மெல்ல அவரையும் என் பக்கம் இழுத்துவிட்டேன் என்பதற்குச் சான்று இந்தப் பணமரம்! :) 

ஒருநாள் காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போன என்னவர் வரும்போது இந்த மரத்துடன் வந்தார்.  "Money Tree" என்ற லேபிளுடன் காஸ்ட்கோவில் விற்பனைக்கு இருந்திருக்கிறது, இவரும் வாங்கிவந்துவிட்டார். இப்போது அவரின்  அலுவலக அறையை அலங்கரிக்கிறது இந்த மணி ட்ரீ!
இந்த மரம் ஆசியாக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது, "போன்சாய்" வகையைச் சேர்ந்த ஒன்று. 1980களில் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது. அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் கொண்டுவரும்  என்ற நம்பிக்கை உள்ளது. இதன் இலைகள் நமது உள்ளங்கை போல 5 இலைகளைக் கொண்டிருக்கும்.  சில மரங்களில் 7 இலைகளும் உள்ளனவாம், அவை இன்னும் அதிர்ஷ்டம் வாய்ந்த மரங்களாகக் கருதப்படுகின்றன. [எங்க மரத்தில 7 இல்ல, 5 தான்! :)].

1980களில் தைவான் நாட்டைச் சேர்ந்த ட்ரக் டிரைவர் ஒருவர் பல்வேறு மரங்களின் தண்டுகளை இப்படி ஜடை போல பின்னி இந்தப் புதுவகை மரத்தை உருவாக்கியதாக கதை சொல்லப்படுகிறது. "ஃபெங் சுய்" நம்பிக்கையின்படி வீட்டில் பவர்ஃபுல்லான இடங்களில் இந்த மரத்தை வைப்பது நல்லதாம். உயிருள்ள பொருட்களை வீட்டில் வைப்பது நன்மை பயக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

பணமரத்துக்கு அதிக வெயில் தேவையில்லை. இன்டைரக்ட் சன்லைட் போதுமானது. ஒவ்வொரு முறையும் தொட்டியில் மண் நன்றாகக் காய்ந்தவுடன் தண்ணீர் ஊற்றினால் போதும். புது இலைகள் வந்திருக்கிறது படத்தைப் பார்த்தாலே தெரியும், ஆகக்கூடி எங்கூட்டுலயும் பணமரம் வளருதுங்கோ! ;)))
ஜீனோ: இது பணங்காய்க்கற மரமாமே, காய்க்குமா? சில்லறை வருமா, நோட்டாக் காய்க்குமா? ;) 
:)
~~~
பதிவில் ஜீனோவின் படம் வந்ததால் இன்னும் சில ஜீனோ'ஸ் டைம்ஸ்!!
லயாவிற்கு தொட்டில் கட்டியதும் ஜீனோவிற்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. தொட்டிலுக்குக் கீழேயே உட்கார்ந்து அண்ணாந்து வேடிக்கை பார்ப்பதும், சமயம் கிடைக்கையில் 2 கால்களில் நின்று:) பாப்புவை எட்டிப்பார்ப்பதும் அவன் வழக்கமாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஐயா பழகிவிட்டார். இப்ப தொட்டில் பக்கம் அவ்வப்போது விஸிட் அடிப்பதுடன் சரி! :) 
ஒரு நாள் பகலில் கரடி பொம்மையுடன் சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தார் ஜீனோ. அப்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அமைதியாக இருந்த வீட்டில் திடீரென டெலிஃபோன் மணி ஒலிக்கவும் ஜீனோவுக்கு கையும் ஓடல, காலும் ஓடல! ;)
வானேஜ் பெட்டியில் ஆரஞ்ச் நிற லைட் எரியும், அங்கேதான் ஏதோ நடக்கிறது என அதனைப் போய்ப் போய்ப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்... :))))
பேசாமல், தொலைபேசியை எடுத்து பதில்சொல்ல:) பழக்கிடலாமா ஜீனோவுக்கு என்று சீரியஸாகத் திங்க் பண்ணிக் கொண்டிருக்கேன். ஹிஹிஹி..
~~~
ரவா கிச்சடி & ரவா கேசரி 
ஏன் அது ரெண்டும் சண்டை போட்டு, கோவிச்சுட்டு தள்ளித் தள்ளி உட்கார்ந்திருக்கு என என்னவர் மாதிரி கோக்கு மாக்கா கேள்வி கேக்காம அமைதியாச்  சாப்புடுங்க என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! 
:))) 

LinkWithin

Related Posts with Thumbnails